Sunday, November 15, 2009

ஆலய தரிசனம் - பயணக்கட்டுரை - பாகம் 2

31-அக்டோபர்-2009 (சனிக்கிழமை)

அதிகாலை நாலரை மணிக்கு அலாரம் ஒலித்தது. அவ்வளவு சீக்கிரமாக எழுவதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. இருந்தாலும், கஷ்டப்பட்டு நாலேமுக்கால் மணிக்கு எழுந்தேன். அம்மாவும், சித்தியும் முன்னதாகவே எழுந்திருந்தார்கள். காலை 5:15 மணிக்குள் பாவூரிலிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்த நாங்கள், ஒருவழியாகக் கிளம்புவதற்குள் 6:15 மணியாகிவிட்டது. அன்று காலை திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, நவதிருப்பதியின் சில கோயில்களை பார்த்துவிட்டு, மதியம் திருச்செந்தூருக்குச் சென்று, பிறகு மாலை திரும்பி வரும் வழியில், நவதிருப்பதியின் மீதமுள்ள கோயில்களையும் தரிசித்துவிட்டு திருநெல்வேலிக்குத் திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தோம். பாவூர் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு பஸ் ஏறினோம். பாவூரிலிருந்து, திருநெல்வேலிக்கு அதிக அளவில் பேருந்து வசதியுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு வந்தவுடனேயே வண்டி கிடைத்துவிட்டது.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் திருநெல்வேலி வந்தடைந்தோம். அங்கேயே ஒரு விடுதியில் அறை எடுத்து, நாங்கள் எடுத்துவந்த எல்லாப் பைகளையும் வைத்துவிட்டு கோயிலுக்குக் கிளம்பலாம் என நினைத்து, திருநெல்வேலி ஜங்ஷனுக்கு அருகேயுள்ள நெல்லை பாலாஜி என்னும் விடுதியில் இடம் இருக்குமா என விசாரித்தோம். அது முகூர்த்த நாள் என்பதால் அறை எதுவும் காலியாக இல்லை என்று கூறிவிட்டனர். பிறகு சற்று தூரத்திலேயே சண்முகா விடுதி என்று ஒன்று இருந்தது. அங்கு சென்று விசாரித்ததில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளது என்றும், நாங்கள் மொத்தம் ஐந்து பேர் என்பதால், இருவருக்கு ஒரு அறை என்ற கணக்கிலும், பாக்கியுள்ள ஒருவருக்கு கட்டாயமாகத் தனிப் படுக்கை வாங்கியாக வேன்டும் என்றும் கூறினர். இரண்டு அறை மற்றும் அந்த ஒரு தனிப் படுக்கைக்குமாக, எண்ணூற்று எழுபத்தைந்து ரூபாயுடன் முன்பணமும் சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அறைகளைத் திறந்துவிட்டனர். நாங்கள் முன்தினம் இரவு எங்களின் சித்தி வீட்டில் துவைத்து காயப்போட்டிருந்த துணிகளில், இன்னும் சரியாகக் காயாத துணிகளை எடுத்து, பக்கத்திலுள்ள ஒரு கடையில் நைலான் கயிறு வாங்கி எங்களின் அறைகளிலேயே காயப்போட்டுவிட்டுக் கிளம்பினோம்.

முன்னதாக, நவதிருப்பதிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வர, எனது நண்பரின் மூலம் அவருக்குத் தெரிந்த ஒருவரின் வண்டியை வாடகைக்குப் பேசியிருந்தேன். அன்று காலை அவரை கைப்பேசியில் அழைத்து, அருகிலுள்ள பரணி உணவகத்திற்கு வரச் சொல்லிவிட்டு, நாங்களும் காலைச் சிற்றுண்டியை முடிக்க அங்கு சென்றோம். சிற்றுண்டி சுமாராகத்தான் இருந்தது. அவ்வளவு சொல்லும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் ஏதோ சாப்பிட வேண்டுமே என்பதற்காகச் சாப்பிட்டுவிட்டு, நவதிருப்பதியின் முதல் தலமான ஸ்ரீவைகுண்டத்திற்குப் புறப்பட்டோம். ஓட்டுனர் எடுத்து வந்திருந்தது ஐந்து பேர் அமரக்கூடிய மாருதி ஆம்னி வேன் என்பதால், எங்களுக்கு மிகவும் சரியாக இருந்தது. நான் முதலில் வரைந்த திட்டப்படி, காலை ஆறு மணிக்குள் திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதிக்குப் புறப்பட‌ வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், சிற்றுண்டியை முடித்துவிட்டு திருநெல்வேலியை விட்டு அன்று கிளம்புவதற்குள்ளாகவே ஒன்பது மணியாகியிருந்தது. நாங்கள் மிகவும் தாமதமாகக் கிளம்பியதால், எல்லா நவதிருப்பதி கோயில்களையும் அன்று ஒரே நாளில் தரிசித்துவிட‌ முடியுமா என்றே மனதில் ஒரு ஐயம் எழுந்துவிட்டது. இருந்தாலும் ஒரு மனவுறுதியுடன் நவதிருப்பதியின் முதல் தலத்திற்குக் கிளம்பினோம். அப்போது நாங்கள் கருங்குளம் என்னும் பகுதியை கடக்கும்போது, அங்கு பார்த்த காட்சி எங்களின் ஈரக்குலையை நடுங்கச் செய்தது. சாலையின் நடுவே பரிதாபமாக ஒரு பசுமாடு வண்டியில் அடிபட்டு இறந்து கிடந்தது. சுற்றிலும் ஊர் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, யாரும் அந்தப் பசுவிடம் நெருங்கக்கூட முன்வரவில்லை. யாருமில்லாதோர் அனாதை போல் அந்தப் பசு அங்கேயே மூச்சின்றி முனகலின்றிக் கிடந்தது. அந்தக் காட்சியை இன்னமும் மனதில் நினைக்கும்போது, மனம் கனக்கிறது, எழுதும்போது கை நடுங்குகிறது, கண்கள் பணிக்கிறது. இறைவனை வேண்டிக்கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு விரைந்தோம்.

நவதிருப்பதியின் ஒவ்வொரு கோயில்களும், ஒவ்வொரு கிரகத்திற்கு பதிலாக பெருமாளை வழிபட கட்டப்பட்டிருப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், நவக்கிரகங்களாகப் பெருமாளே இருந்து அனைவரையும் காத்தருள்வதாகக் கூறப்படுகிறது. அவரவர்க்கு உள்ள கிரக தோஷ‌ங்கள் நீங்க, நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. நாங்கள் முதலில் சென்ற ஸ்ரீவைகுண்டம், சூரியனின் தலமாகும். பத்து மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தோம். நேரமாகிக் கொண்டிருப்பதை மனதில் வைத்தபடியே கோயிலுக்குள் சென்றோம். உள்ளே சென்றால், மூலஸ்தானம் திரையால் மூடப்பட்டிருந்தது. அங்கு விசாரித்ததில், அலங்காரமும், பூஜையும் நடந்துகொண்டிருப்பதாகவும், பூஜை முடிய இன்னும் சற்று நேரம் ஆகுமென்றும் கூறினர். மூலவருக்குப் பூஜை முடிவதற்குள், மற்ற எல்லா சன்னதிகளையும் தரிசித்துவிட்டு மூலவர் சன்னதிக்கு வந்தோம். பூஜை முடியும் தருவாயில் இருந்தது. சில நிமிடங்கள் கழித்துத் திரை விலக, பெருமாளின் அழகிய திருமுகம் காணக் கிடைத்தது. இத்திருக்கோயிலின் மூலவர் - ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் - ஸ்ரீ கள்ளப்பிரான். தாயார் - ஸ்ரீ வைகுந்த நாயகி மற்றும் ஸ்ரீ சோரநாத நாயகி. பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது சிறப்பம்சமாகும். காலவிதூஷன் என்ற திருடன், தான் திருடிய பொருட்களில் பாதியை ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு சமர்பித்து வந்தான். ஒருமுறை அவன் அரண்மனையில் திருடி அகப்பட்டுக்கொள்ள, பகவான் திருடன் உருக்கொண்டு அரசனிடம் சென்று தத்துவ ஞான உபதேசம் செய்தார். அரசனுக்கு, வந்திருப்பதோ மகாயோகி என்று புரிந்தது. பின்னர் அரச‌னுக்கு காட்சி தந்து கள்ளர்பிரான் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தின் சிறப்பு சோமன் என்ற அரக்கன் பிரம்மாவின் ஞானத்தை அபகரித்ததகாவும் பிரம்மா அவ்விடத்தில் தவமிருந்து மீண்டும் ஞானம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு, ஆழ்வார்திருநகரியிலுல்ல அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலுக்குப் புறப்பட்டோம். ஸ்ரீவைகுண்டம் கோயிலிலிருந்து கிளம்பி பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஆழ்வார்திருநகரியிலுல்ல கோயிலுக்கு வந்திருந்தோம். இந்தக் கோயில் குருவின் தலமாகும். நாங்கள் சென்ற நேரத்தில் இந்தக் கோயிலிலும் பெருமாளுக்கு பூஜை நடந்து கொண்டிருந்ததால் திரை போடப்பட்டிருந்தது. அதனால் பெருமாளைப் தரிசிப்பதற்கு முன், மற்ற எல்லா சன்னதிகளிலும் உள்ள இறைவனை தரிசித்தோம். அப்போது அங்குள்ள 'உறங்காப்புளி' என்னும் இடத்திற்கு வந்தோம். இதன் பெருமை எங்களின் மெய் சிலிர்க்க வைத்தது. இவ்விடத்தின் வரலாறு என்னவென்றால், காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றியவ‌ர் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததை பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார் (செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் அவ‌ர் மதுரகவி ஆழ்வார் எனப் புகழப்பட்டார்). அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவியாழ்வார், அது புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார். ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லைப் போட்டதும், சடகோபர் கண்விழித்தார். "செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார். இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இதனாலேயே இத்தலம் நவதிருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் இங்கு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம் ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் உறங்காப்புளி' என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் தனது 35ம் வயதில் மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். இம்மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டது. மதுரகவி ஆழ்வார் தனது குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பிப் பெருமையடைந்தார். நம்மாழ்வார் இந்த மரத்தடியில் இருந்தத‌ற்குச் சான்றாக, இன்றும் அந்த இடத்திலுள்ள புளிய மரத்தின் அடியில், ஒரு குழந்தையின் கால்கள் பின்புறமாக இருப்பதைப் போல் உள்ளதைக் காணலாம். அன்பான இணையதள ரசிகர்களான‌ உங்களுக்காக, இதோ அந்த அரிய புகைப்படங்கள்.







அங்கிருந்து பெருமாள் இருக்கும் மூலஸ்தானத்திற்கு வந்து அருள்மிகு ஆதிநாதப்பெருமானை தரிசித்தோம். இந்தக் கோயிலின் மூலவர், ஸ்ரீ ஆதிநாதன் (நின்ற திருக்கோலம்). உற்சவர், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான். தாயார், ஸ்ரீ ஆதிநாதநாயகி மற்றும் ஸ்ரீ திருக்குருகூர் நாயகி. இங்கு தல விருட்சமாக புளியமரம் விளங்குகிறது.

அடுத்ததாக திருக்கோளூர் புறப்பட்டோம். கிளம்பிய பத்து நிமிடத்திற்குள் அருள்மிகு ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலை வந்தடைந்தோம். கோயிலருகில் வந்ததுமே பலமான மழைத்தூறல் தூற ஆரம்பித்தது. மழையில் நனையாமலிருக்க மெதுவாக ஓடியபடியே கோயிலுக்குள் சென்றோம். நான் மட்டும் அங்கு கோயிலின் அருகே மிதிவண்டியில் புறப்பட்டுக் கொண்டிருந்த‌ ஒரு சிறுவனிடம் குடையைக் கேட்டு வாங்கி, கோயிலின் வெளிப்புற அழகை புகைப்படமாகப் பதித்துவிட்டு கோயிலுக்குள் சென்றேன். இத்திருக்கோயில் செவ்வாய் தலமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலிலும் நாங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், பெருமாளுக்குப் பூஜை நடந்துகொண்டிருந்தது. பூஜை முடிந்தவுடன், அழகாக பெருமாள் அனந்தசயனத்தில் அருளிக் கொண்டிருந்தார். இங்கு மூலவராக ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளும், உற்சவராக ஸ்ரீ நிஷொபவித்தனும், தாயாராக ஸ்ரீ குமுதவல்லி நாயகியும், ஸ்ரீ கோளூர் வல்லி நாயகியும் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். முன்னொரு காலத்தில், பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. குபேர‌னிடமிருந்து விலகிய நவநிதிகள் நாராயணனிடம் போய்ச் சேருகின்றன. நாராயணன் அந்த நிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு 'வைத்தமாநிதி' என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்குக் கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தல பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளைப் பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு 'அதர்மபிசுனம்' என்ற பெயரும் உண்டு. தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்த‌ யானையிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

திருக்கோளூரிலிருந்து, தென்திருப்பேரைக்குப் புறப்பட வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். திடீரென வண்டி கிளம்பாமல் அடம் பிடித்தது. ஓட்டுனர் எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டி நகர்வதாக இல்லை. அப்போதே மதியம் பன்னிரண்டு மணிக்குமேல் ஆகியிருந்தது. மதியம் நடையை சாத்துவதற்குள் தென்திருப்பேரைக் கோயிலுக்கும் சென்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களின் மனதில் இருந்தாலும், வண்டி என்னவோ எங்களுக்கு ஒத்துழைப்பதாக இல்லை. சரி, ஒரு கை பார்த்துவிடுவோம் என்று வண்டியை விட்டு இறங்கி தள்ள ஆரம்பித்தோம். அப்போதும் வண்டி நகர்ந்ததே தவிர, கிளம்புவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒரு பத்து நிமிடம் போராடிய பின், அந்த வழியாக வந்த சிறுவர்கள் கூட்டத்திடம் கொஞ்சம் வண்டியைத் தள்ளச் சொன்னோம். என்ன ஒரு ஆச்சரியம் ... அவர்கள் வண்டியில் கைவைத்த உடனேயே வண்டி கிளம்பிவிட்டது. அந்தச் சிறுவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, தென்திருப்பேரைக்கு விரைந்தோம். நாங்கள் சென்றது சனிக்கிழமை என்றதால், அன்றைய தினம் எல்லாப் பெருமாள் கோயில்களுமே கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம் கூடுதலாகத் திறந்திருக்கும் என்று கூறியிருந்தனர். அந்த நம்பிக்கையுடந்தான் தென்திருப்பேரைக்குச் சென்றோம்.

கோயிலுக்குள் மதியம் பன்னிரண்டரை மணிக்குள் சென்றுவிட்டோம். இத்திருக்கோயில் சுக்ரனின் தலமாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலிலும் பெருமாள் எங்களுக்கு உடனே தரிசனம் கொடுக்கவில்லை. நாங்கள் சென்றபோது, கிட்டத்தட்ட நடையை மூடி விட்டனர் என்றே கூற வேண்டும். திரை போடப்பட்டிருந்தது. மூலஸ்தானத்தில் கதவும் மூடப்பட்டிருந்தது. ஆனால் அங்குள்ள பட்டர் ஒருவர், இன்னும் நடை மூடவில்லை என்றும், எங்களை மற்ற சன்னதிகளுக்குச் சென்று விரைவாக‌ பெருமாள் சன்னதிக்குத் திரும்புமாறும் கூறினார். நாங்களும் அந்தக்கோயிலின் தாயார்களாகிய குழைக்காது வல்லி நாச்சியாரையும், திருப்பேரை நாச்சியாரையும் தரிசித்துவிட்டு, பெருமாள் சன்னதிக்குத் திரும்பினோம். அப்போதும் பெருமாள் சன்னதியின் நடை மூடப்பட்டே இருந்தது. நாங்கள் வருவதற்குள் நடையை மூடிவிட்டார்களா ? இவ்வளவு தூரம் வந்து பெருமாளைப் பார்க்காமலேயே திரும்பிவிடுவோமோ ? அப்படி நடையை மூடியிருந்தால், அதன் பின்னர் மீண்டும் நடையைத் திறப்பார்களா ? என்று மனதில் பல சந்தேகங்களுடன், பெருமாள் சன்னதிக்கருகிலேயே காத்திருந்தோம். எங்களைக் காத்திருக்கச் சொல்லிச் சென்ற பட்டர் அப்போதுதான் வந்தார். "இப்போது நடையைத் திறப்போம் ... கொஞ்சம் பொறுத்திருங்கள் ..." என்று சொன்னதும்தான் பெருமூச்சு விட்டோம். வெகுதொலைவிலிருந்து பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் மனம் கோணாமலிருக்க சற்று நேரமானாலும் நடையைத் திறந்து வைத்து, பக்தர்கள் இறைவனை வழிபட உதவுவது அவர்களுக்குப் பழகிப்போன ஒன்று என்று அவரிடம் பேசிய பின்புதான் தெரிந்தது. அவர்களின் இறைபணி வாழ்க ... வளர்க ... !!! சில நிமிடங்கள் கழித்து புலம்பியபடியே வந்த இன்னொரு பட்டர், பெருமாள் சன்னதியின் நடையைத் திறந்தார். உள்ளே சென்று மூலவரான ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதரை தரிசித்தோம். உற்சவராக, ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். தாயார், ஸ்ரீ குழைக்காது வல்லி நாச்சியார் மற்றும் ஸ்ரீ திருப்பேரை நாச்சியார். தல வரலாற்றின்படி, பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து, தாமிரபரணியாற்றில் மூழ்கி எழும்போது இரண்டு பெரிய குண்டலங்களைப் பெற்றாள். அதனால் ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில், தாமிரபரணியில் பெற்ற, மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பித்ததால் பகவான், மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற திருநாமம் பெற்றார். பூமி‌தேவி, ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால் இத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தைப் பற்றிய இன்னொரு புராணமும் உள்ளது. வருணன், குருவை நிந்தனை செய்த பாவம் விலக, பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து, பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகவும், பகவானை பூஜித்து பாவம் நீங்கி மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.

தென்திருப்பேரையில் தரிசனம் முடித்தவுடன், அங்கிருந்து கிளம்பி திருச்செந்தூருக்குச் சென்று அங்கேயே ஒரு நல்ல உணவகத்தில் மதிய உணவை முடித்துவிட்டு, பின்னர் அருள்மிகு செந்தில்நாதனை தரிசித்துப் பின் மாலை வரை அலைகள் முத்தமிட்டுச் செல்லும் கடற்கரையில் கால் நனைத்து, மனம் வருடிச் செல்லும் காற்றில் பொழுதைக் கழிக்க எண்ணியிருந்தோம். மறுபடியும் திருநெல்வேலிக்குத் திரும்பும் வழியில் மீதமுள்ள ஐந்து கோயில்களையும் தரிசித்துவிடலாம் என நினைத்திருந்தோம். ஆனால் தென்திருப்பேரையிலிருந்து கிளம்பும்போது அந்த பட்டர் கூறியதோ, எங்களின் நினைப்பிற்கு மாறாக இருந்தது. ஆமாம் ... நாங்கள் இன்னும் செல்ல வேண்டிய கோயில்களில் திருக்குளந்தையிலுள்ள நவதிருப்பதி தலம் தவிர, மற்ற கோயில்களில் மாலை ஆறு மணிக்குள்ளாகவே நடையை மூடிவிடுவார்கள் என்று அந்த பட்டர் கூறினார். அவர் கூறியது என் மனதில் ஒரு லேசான அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், நாங்கள் திட்டமிட்டபடி திருச்செந்தூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வரும் வழியில் மீதமுள்ள‌ கோயில்களைப் பார்ப்பதாக இருந்தால், நிச்சயமாக அது சாத்தியம் கிடையாது என்பது புரிந்ததால்தான். அதுவும் நத்தம் என்னும் இடம், நாங்கள் முதலில் சென்று வழிபட்ட ஸ்ரீவைகுண்டத்திற்கு மிக அருகிலுள்ள இடமாகும். கிட்டத்தட்ட நாங்கள் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் சென்று, மறுபடியும் நாங்கள் இப்பொது இருக்கும் இடத்தினருகே வந்து, அந்த வழியாகவே திருச்செந்தூருக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. ஆகையால் சீக்கிரமாக நடையை மூடும் கோயில்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். எங்களின் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, முதலில் இரட்டைத் திருப்பதிக்குச் செல்வதா, இல்லை நத்தத்திற்குச் செல்வதா என்ற யோசனையிலேயே எங்களின் வண்டியில் ஏறி அமர்ந்தோம். அந்த நேரம் பார்த்து, வண்டி மீண்டும் சதி செய்தது. மழை பெய்ததால் வண்டிக்குள் தண்ணீர் போய்விட்டது என்று ஓட்டுனர் சொல்லித் தெரிய‌வ‌ந்த‌து. மனதிற்குள் அழுகையும் சிரிப்பும் ஒரு சேர கலந்து வந்தது. எல்லாம் இறைவனின் செயல் என்று எண்ணியபடியே வண்டியில் உட்கார்ந்திருந்தோம். இருபத்தைந்து நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர், வண்டி ஒரு வழியாகக் கிளம்பியது. சில நிமிடக் குழப்பத்துக்குப் பின்னர், முதலில் நத்தத்திற்குச் செல்வதாக முடிவெடுத்துப் புறப்பட்டோம்.

நாங்கள் நத்தத்திற்குச் சென்ற அந்த வழி, கிட்டத்தட்ட‌ ஒற்றையடிப்பாதையை விட கொஞ்சம் அகலமாக இருந்தது. நல்ல வேளையாக, வேறு எந்த கனரக வாகனமும் வழியில் வரவில்லை. அதனால் ஒன்றரை மணிக்குள், திருவரகுணமங்கை என்னும் நத்தம் வந்தடைந்தோம். இங்குள்ள நவதிருப்பதிக் கோயில், சந்திர தலமாகும். இத்திருக்கோயிலில் மூலவராக ஸ்ரீ விஜயாஸனரும் (பரமபத நாதன்), உற்சவராக ஸ்ரீ எம்மடர் கடிவான் பெருமானும் வீற்றிருந்து காட்சியளிக்கின்றனர். தாயார் - ஸ்ரீ வரகுண மங்கை மற்றும் ஸ்ரீ வரகுண வல்லி. இங்கும் எங்களின் காத்திருத்தல் தொடர்ந்தது. ஏனெனில் இந்தக் கோயிலின் வழக்கப்படி, மதியம் பன்னிரண்டு மணி முதல் ஒரு மணி வரை நடை மூடிவிடுவார்கள். இங்கு தாயாருக்கென தனியாக சன்னதி கிடையாது. திருவரகுணமங்கை, வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி, விஜயாஸனர் என்ற திருநாமத்தோடு பெருமாள் இங்கு அருளிக்கொண்டிருக்கிறார். அக்னி ரோமச முனிவர் மற்றும் சத்தியவான் ஆகியோருக்கும் காட்சிதந்த தலம் இது என்று தலபுராணம் கூறுகிறது. நடை திறந்தவுடன், பெருமாளையும் தாயாரையும் ஒரு சேர தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். அத்தலத்தின் புன்ய தீர்த்தமான, அக்னி தீர்த்தத்தில் ஒரு துளி கூட தண்ணீரின்றி வறண்டுபோய்க் கிடந்தது.

அடுத்ததாக திருப்புளியங்குடிக்கு வந்தோம். இது புதனின் தலமாக விளங்குகிறது. ஐந்து கோயில்களுக்குப் பிறகு, இந்தக் கோயிலில்தான் எங்களைக் காத்திருக்க வைக்காமல் காட்சியளிக்கப் பெருமாளுக்கு மனம் வந்தது. இத்திருத்தலத்தின் மூலவர், ஸ்ரீ பூமிபாலகர் அனந்தசயனத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்; உற்சவர், ஸ்ரீ காய்சினவேந்தப் பெருமாள்; தாயார், ஸ்ரீ நிலமகள் மலர்மகள் நாச்சியார் மற்றும் ஸ்ரீ புளியங்குடி வல்லி நாச்சியார். இங்கு பிரம்மாவை தனது நாபியிலிருந்து வரும் தாமரைக்கொடியில் தாங்கியவாறு பெருமாள் காட்சியளிக்கிறார். இந்தத் தலத்தில் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும், வசிஷ்ட புத்திரர்களால் சாபம் பெற்று ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் அடைந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்தத் தலத்தில், ஒவ்வொரு நவதிருப்பதி கோயிலின் நடை திறந்திருக்கும் நேரங்கள் தெளிவாக அட்டவணையிடப்பட்டிருந்தது. அத்துடன், அந்த கோயில்களுக்குச் செல்லும் வழியும் வரையப்பட்டிருந்தது. இதனை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். புகைப்படத்தைக் கீழே காணலாம்.





நவதிருப்பதி தரிசனத்திற்கு நான் முன்னரே திட்டமிட்ட‌போது, கோயிலின் நேரங்கள் மற்றும் செல்லும் வழி போன்ற இம்மாதிரியான ஆவனங்கள் எனக்குக் கிடைத்திருந்தால் இன்னும் சரிவர இந்த நவதிருப்பதிப் பயணத்தை திட்டமிட்டிருக்கமுடியும். இவ்வளவு தூரம் தேவையில்லாமல் சுற்றுவதற்கான வாய்ப்பும் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். இனிமேல் அதைப் பற்றி நாங்கள் பேசி எந்தப் பயனுமில்லை. இருந்தாலும் இந்தப் புகைப்படங்களை எனது பதிவில் இடுவதற்கான காரணம், இதைப் படிப்பவர்கள் யாரேனும் இனி நவதிருப்பதிக்குச் செல்லத் திட்டமிட்டால், அவர்களுக்கு இந்தத் தகவல்கள் ஏதாவது ஒரு வகையில் பயன்படுமானால், அதுவே இந்தப் பதிவின் மகத்தான‌ வெற்றியாகக் கருதப்படும்.

அடுத்ததாக திருத்தொலைவில்லி மங்கலத்திலுள்ள இரட்டைத்திருப்பதிக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் ஒரு இடத்தை நெருங்கும்போது அங்கு பல மயில்களைக் காண முடிந்தது. சில மயில்கள் தோகை விரித்து ஆடிக்கொண்டிருக்கும் கண் கொள்ளாக்காட்சியைப் பார்க்கும்போதே மெய் சிலிர்த்துப்போனது. யாருமில்லாத அந்த இடத்தில் அவைகள் மட்டும் அதன் கூட்டத்தோடு, அழகாக உலா வந்து கொண்டிருந்தன‌. அதனை மிக அருகே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்ற எனக்கோ ஏமாற்றம்தான் மிஞ்சியது. நான் மெதுவாக அதன‌ருகில் வருவதைப் பார்த்ததும், அதுவும் மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. நான் சற்று நடையில் வேகத்தைக் கூட்டியவுடன், அது ஓடிச் சென்று விட்டது. இந்தக் கலவரத்தில் இறுகிய சேற்றில் விழுந்தெழுந்ததுதான் மிச்சம். சேற்றில் விழுந்தாலும் நான் கையில் வைத்திருந்த கேமராவுக்கு எதுவும் ஆகாதபடி பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தேன். ஏனென்றால், நான் வாங்கி வந்திருந்தது, என்னுடன் பணியாற்றும் எனது நண்பரின் கேமராவை. நானும் மனம் தளராமல் ஒரு இரண்டு மூன்று மயில்களை கிட்டத்தில் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து துரத்திச் சென்றேன். ஆனால் கடைசியில் ஜெயித்ததென்னவோ அந்த மயில்கள்தான். அதையும் தாண்டி கேமராவில் பதிந்த புகைப்படங்களில் சில, இதோ உங்களுக்காக ... !!!













இரட்டைத்திருப்பதியின் ஒரு தலமான, அருள்மிகு ஸ்ரீ அரவிந்த லோசனர் திருக்கோயிலுக்கு வரும்போது பிற்பகல் 3:15 மணி ஆகியிருந்தது. இத்திருக்கோயில் கேதுவின் தலமாகும். இங்குள்ள மூலவரின் பெயர் ஸ்ரீ அரவிந்த லோசனர். உற்சவராக ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் வீற்றிருக்கிறார். தாயார், ஸ்ரீ கருந்தடங்கண்ணி. இந்தக் கோயிலிலும் ஏதோ ஒரு பூஜை நடந்துகொண்டிருந்ததால், சற்று நேரம் காத்திருந்த பின்னரே, பெருமாளைத் தரிசிக்க முடிந்தது. இதற்கிடையில், கோயிலில் நிறைய மாவிலைகள் குவிக்கப்பட்டு அதனைத் தோரணமாகக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த மாவிலைக் கொத்தில், அங்குமிங்குமாய் சிதறிக்கிடந்த சிறிய அளவிலான மாங்காய்களை எடுத்துக் கழுவி ருசி பார்த்தோம். பின்னர் இரட்டைத்திருப்பதியின் மற்றொரு தலமான, ராகு தலத்திற்குப் புறப்பட்டோம்.

வண்டியில் ஏறி கதவைச் சாத்தியதுதான் தாமதம், அடுத்த கோயில் வந்துவிட்டது. மூடிய வேகத்திலேயே மீண்டும் கதவைத் திறந்து, ஸ்ரீ தேவர் பிரான் திருக்கோயிலுக்குள் நுழைந்தோம். இத்திருத்தலத்தின் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவராக ஸ்ரீ தேவர் பிரானும், தாயார்களாக ஸ்ரீ அலமேலுமங்கைத் தாயாரும், ஸ்ரீ பத்மாவதி தாயாரும் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

தரிசனம் முடித்துவிட்டு இரட்டைத்திருப்பதியிலிருந்துக் கிளம்பி, கடைசியாக நவதிருப்பதி தலங்களில் மீதமிருந்த பெருங்குளத்திற்கு மாலை 4:15 மணிக்கு வந்தடைந்தோம். இங்கு வருவதற்குள்ளாகவே கிட்டத்தட்ட எங்களின் உடல் முழுவதுமாகச் சோர்ந்துவிட்டது. ஏதாவது உடனே சாப்பிட்டு கொஞ்சம் தெம்பூட்ட வேண்டும் போலிருந்தது. ஆனால், அங்கு கோயிலின் அருகில் எதுவும் சாப்பிடுவதற்கும் இல்லை. காலையில் நாங்கள் சாப்பிட்ட சிற்றுண்டியும் அந்த அளவுக்கு இல்லாததால், எங்களுக்கு இவ்வளவு நேரம் தாக்குப்பிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதனைப் பற்றி நினைக்காமல், திருக்குளந்தை என்னும் பெருங்குளத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ வேங்கடவாணன் திருக்கோயிலுக்குள் சென்றோம். இது சனி தலமாகும். அதுவும் நாங்கள் சென்றது சனிக்கிழமை என்ப‌தால் இந்தக்கோயிலில் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோயிலில் எள்ளு முடிச்சு வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. நானும் எனது தங்கையும், ஆளுக்கொரு தட்டு தீபம் வாங்கி ஏற்றினோம். ஒரு தட்டில், இரண்டு அகல்களில் நெய் ஊற்றப்பட்டும், அதைத் தவிர ஒரு எள்ளு முடிச்சும் இருந்தது. விளக்கினை ஏற்றிவிட்டு பெருமாளைத் தரிசிக்கச் சென்றோம். இத்திருக்கோயிலின் மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். உற்சவராக ஸ்ரீ மாயக்கூத்தரும், தாயார்களாக ஸ்ரீ அலமேலு மங்கை, ஸ்ரீ கமலாவதி மற்றும் ஸ்ரீ குழந்தைவல்லி நாச்சியாரும் அருள்புரிந்து கொண்டிருக்கின்றனர். கோயில் பிரகாரத்திற்கு வெளியே மற்றொரு தனிப் பிரகாரமாக, சிறிய கோயிலொன்றினுள், ஸ்ரீ வேங்கடவாணன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். முன்னொரு காலத்தில், வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்துத் தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன், பகவானுடன் யுத்தம் செய்ததாகவும், பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் கூறுகிறார்கள். தேவர்களின் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ச‌வராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார். தரிசனம் முடித்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வெளியே வந்தோம்.

நாங்கள் எல்லோரும் பசியால் வாடிப்போயிருந்தாலும், எல்லா நவதிருப்பதிக் கோயில்களையும் முழுவதுமாகத் தரிசித்துவிட்டோம் என்ற மன நிறைவு மட்டும் உள்ளிருந்து, எங்களின் வயிற்றுப் பசியை நாங்கள் அறியாமல் செய்து கொண்டிருந்தது. அந்த சந்தோஷத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய திருச்செந்தூருக்குப் புறப்பட்டோம். வழியில் ஏதாவது ஒரு பெரிய ஊர் வந்தால், அங்கு இறங்கி ஒரு நல்ல உணவகத்தில் கொஞ்சமாக ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்வதாக முடிவெடுத்தோம். அதன்படி, நாங்கள் சென்ற வழியில் முதலில் வந்த பெரிய ஊராகிய ஏரல் என்னும் இடத்தில் இறங்கிக் கொஞ்சமாக எங்களின் பசியைத் தீர்த்தோம். அங்கு கொஞ்சம் சாப்பிட்ட பின்புதான் எங்களுக்கு கண்ணே ஒழுங்காகத் தெரிய ஆரம்பித்தது. இப்போது ஒரு நகைச்சுவைக்காகச் சொல்வதுபோல் இருந்தாலும், அன்று நாங்கள் எல்லோரும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தோம்.

அப்போது நாங்கள் உணவருந்திய இடத்தினருகிலேயே ஒரு சிவன் கோயிலில் பிரதோஷப் பூஜை நடந்துகொண்டிருந்தது. பிரதோஷமன்று சிவபெருமானைத் தரிசிப்பது மிகவும் உகந்தது என்பதால் அத்திருக்கோயிலுக்குச் சென்றோம். பூஜை நடந்து கொண்டிருந்ததால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயிலின் உள்ளே கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது. இந்தக் கூட்டத்தினிடையே அரைகுறையாகக் காணக் கிடைத்த சொக்கலிங்கநாத சுவாமியின் லிங்க வடிவத்தைத் தரிசிப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. காணக் கிடைத்த வடிவத்தை மனதில் நிறுத்தி ஒரு கணம் வழிபட்டு, பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்தோம். பின்னர் வெளியே வந்து வண்டியிலேறிப் புறப்பட்டோம். குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வந்தடைவதற்குள் மாலை 6:45 மணியாகியிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கி அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நடந்து செல்லும்போதே, சில்லென்று வந்த‌ காற்றில் மெய் சிலிர்த்தது. பின்னர் கடற்கரைக்குச் சென்று, சற்று நேரம் கடலலையில் கால் நனைத்தோம். கடல‌லை எங்களின் பாதங்களை முத்தமிட்டுச் சென்ற‌ அந்த நிமிடங்கள், எங்களின் மெய் மறந்திருந்தோம். பின்னர் கடற்கரையிலேயே விற்கப்பட்டுக் கொண்டிருந்த சுக்குக் காபி, பருத்திக்கொட்டையினாலான பால் மற்றும் வேகவைத்த வேற்கடலைகளை வாங்கிக் சாப்பிட்டுவிட்டு, அருள்மிகு செந்தில்நாதனை தரிசிக்கக் கோயிலுக்குள் சென்றோம். அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி, இத்திருக்கோயிலின் மூலவராக அருள்பாலித்துக் கொண்டிருந்தார். உற்சவராக, ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஜெயந்திநாதர், ஸ்ரீ குமரவிடங்கர் மற்றும் ஸ்ரீ அலைவாய் பெருமாள் காட்சி தந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் 'படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம், திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, 'ஆறுபடை வீடு' என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், 'ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, 'திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, 'ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

புராண காலத்தில், தேவர்கள் தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கி, குரு பகவானின் மூலமாக அசுரர்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டார். அப்போது சூரபத்மனிடம் நல்வழிக்குத் திரும்பும்படி வலியுறுத்த‌, தனது படைத்தளபதியான வீரபாகுவை தூது அனுப்பினார். அவன் அதற்கெல்லாம் அடிபணிவதாயில்லை. பின்பு, முருகப்பெருமான் சூரபத்மனைத் தன் படைகளுடன் சென்று, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வதம் செய்து ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

வியாழ பகவான், முருகனிடம், தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், 'செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே 'செந்தில்நாதர்' என மருவியது. இத்தலமும் 'திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, 'திருச்செந்தூர்' என பிற்காலத்தில் மருவியது.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தைச் சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்குத் திரும்புவார். ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு, தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவ வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்தோம்.

எல்லா சன்னதிகளிலும் அருமையாக தரிசனம் கிடைத்தாலும், இதனிடையே ஒரு நிகழ்வு மட்டும் மனதை வருடிக்கொண்டே இருந்தது. அதுதான், பெருமாள் சன்னதியில், அர்ச்சகர் ஒருவர் பிச்சை கேட்பதுபோல், "பெருமாளைப் பாத்துக்கோங்கோ; தட்சணை இருந்தா வெச்சிட்டுப் போங்கோ ..." என்று தரிசிக்க வந்த ஒவ்வொருவரிடத்திலுமாகக் கேட்டது, பார்ப்பதற்கே மிக அறுவறுப்பாக இருந்தது. இப்படியிருந்தால், ஒரு புனித தலத்தில் இறைவனுடன் அவர் பக்கத்திலேயே சேவை செய்துகொண்டிருக்கும் அர்ச்சகர்களுக்கும், நடு ரோட்டில் நின்று கையேந்திப் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குப் புரியவில்லை. இதற்காக நான் எல்லா அர்ச்சகர்கள் சமூகத்தையும் இழிவு படுத்துவதாக எண்ண வேண்டாம். பக்தகோடிகளின் நலனுக்காக இறைபணியில் ஈடுபட்டிருக்கும் பல அர்ச்சகர்களின் மத்தியில், இம்மாதிரி பணத்திற்காக மட்டுமே கோயிலில் இருக்கும் சில அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். "மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு" என்று உண்மையான இறைபணியில் ஈடுபட்டிருக்கும் அர்ச்சகர்களுக்கு உதாரணம், அன்று நாங்கள் சென்ற நவதிருப்பதி தலத்தில் ஒன்றான தென்திருப்பேரைக் கோயிலின் அர்ச்சகர்கள். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. என்னவென்றால், அந்தக் கோயிலில் பெருமாளுக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தபோது, எங்களுடன் வந்திருந்த எனது சித்தி தட்டில் போடுவதற்காக காணிக்கை எடுப்பதைப் பார்த்த அந்த அர்ச்சகர், அதெல்லாவற்றையும் உள்ளே வைக்குமாறும், முதலில் சுவாமியை நன்றாக தரிசனம் செய்யச் சொல்லியும் வலியுறுத்தினார். இம்மாதிரியான அர்ச்சகர்களுக்கு மத்தியில், பணம் என்ற ஒரு பொருளை மட்டுமே குறியாக வைத்துச் செயல்படும் சில அர்ச்சகர்களும் இங்கும் அங்குமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிறகு கோயிலைவிட்டு வெளியே வந்தவுடன், வீட்டிற்கும், அலுவலகத்திற்குமாக கொஞ்சம் பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு, வள்ளி குகைக்குச் செல்வதற்காக, அது எத்தனை மணிவரை திறந்திருக்கும் என்று அங்கிருந்த ஒரு காவலாளியிடம் விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, இரவு ஏழு மணிக்கே அது மூடப்பட்டுவிட்டது என்பது. முருகப்பெருமானும், வள்ளியும் ஓடிப்பிடித்து விளையாடிய இடம்தான் வள்ளிக்குகை என்றும், முருகன் துரத்திச் செல்லும்போது வள்ளியின் சேலை பட்டு அந்த அச்சு, கோடாகப் பதிந்திருப்பதை இன்னும் அங்கிருக்கும் பாறைகள் பிரதிபலிக்கின்றன என்றும் எனது நண்பர்கள் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் இந்த குகைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் முன்னரே நாங்கள் இருந்தோம். ஆனால் திறந்திருக்கும் நேரத்தைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாததால், இந்தக் குகைக்குச் சென்று பார்க்க முடியாமல் போயிற்று. பிறகு திருச்செந்தூரிலேயே உள்ள, மணி அய்யர் உணவகத்தில் அன்றைய இரவு உணவை முடித்துவிட்டு, பத்து மணிக்கு திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பினோம்.

இரவு பதினோரு மணிக்குள்ளாக, நாங்கள் ரூம் எடுத்திருந்த சண்முகா விடுதியை வந்தடைந்தோம். எல்லோரையும் அறைக்கு அனுப்பிவிட்டு, நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வண்டியை அத்துடன் பேசி முடித்துவிட்டு, சற்று தூரத்திலிருந்த சாந்தி விலாஸ் இனிப்பகத்தில், திருநெல்வேலி அல்வாவை எனது வீட்டிற்கும், அலுவலகத்திற்குமாக வாங்கிக்கொண்டு, விடுதியிலிருந்த எங்களின் அறைக்குத் திரும்பினேன். அறைக்கு வந்தவுடன், முதல் வேலையாக அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டு அதில் வரும் ஒரு செய்தி அலைவரிசையில் அன்று நடந்த கிரிக்கெட் போட்டியின் முடிவைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்று சொல்வதை விட, கிரிக்கெட் வெறியன் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி, புதுடில்லியில் அன்று பகலிரவு ஆட்டமாக‌ நடந்தது. நான் மாலையிலிருந்தே அடிக்கடி சற்று நேர இடைவெளியில் என்னுடன் பணியாற்றும் எனது நண்பனை கைப்பேசியில் தொடர்புகொண்டு போட்டியின் அவ்வப்போதைய நிலவரத்தை அறிந்துகொண்டிருந்தேன். நாங்கள் திருச்செந்தூரிலிருந்து தொடர்புகொண்டபோது, கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இந்தியா போட்டியில் ஜெயிப்பது கடினம் என்பதுபோல் என்னிடம் எனது நண்பன் சொன்னான். அதற்குப் பிறகு அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அதனால் எவ்வளவு ரன்களில் இந்தியா தோற்றுள்ளது என பார்க்கலாம் என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம், யுவராஜ் மற்றும் தோனியின் அற்புதமான ஆட்டத்தால், இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது. சிறிது நேரம் அந்த அலைவரிசையிலேயே காட்டப்பட்ட போட்டியின் காட்சிக் கோப்பினைப் பார்த்தேன். பிறகு தூக்கம் லேசாக கண்களை இறுக்கியது. அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து, ஆறு மணிக்குள்ளாக அருள்மிகு நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று கோ பூஜை மற்றும் கஜ பூஜையைப் பார்ப்பதாகத் திட்டமிருந்ததால், காலை ஐந்து மணிக்கு ஒலிக்கும்படியாக அலாரம் வைத்துவிட்டுப் படுத்தேன். படுக்கும்போது நள்ளிரவு மணி ஒன்று.

அடுத்த பாகம் விரைவில் ... பயணம் தொடரும் ...

4 comments:

karthikeyan pandian said...

pavam mayila thorathi odi pudichu vilayaduna

u r disturbibng thier privacy

anyways good photos

வி.ல.நாராயணசுவாமி said...

மிக்க நன்றி கார்த்திகேயன் ... :-)

Anonymous said...

Thambi enna tamizh idhu.... Niraya Perundhu nu eludhi iruka... etho paravala got some time pass.... visit DhyanaLingam ... a temple which should not be missed in a life time....

-- Senthil

வி.ல.நாராயணசுவாமி said...

தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி திரு.செந்தில் அவர்களே. தாங்கள் கூறியது திருத்தப்பட்டுவிட்டதை மேலே காணலாம்.

Post a Comment