Thursday, February 28, 2013

பாதை மாற்றப்பட்ட பழமொழிகள் - பகுதி 1



அன்பு நண்பர்களே!!! இந்த வலைப்பக்கத்தின் பதிவினை படிக்க வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு என்றால் அது சரியாகாது!!!
சில வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு தொடக்கம் என்றால் அது மிகையாகாது!!!

சமீபத்தில், இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்பொழுது, அன்றாடம் நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல பழமொழிகளில், ஒரு சிலவைகளைப் படிக்க நேர்ந்தது.

அப்படிப் படிக்கும்பொழுது, மனதில் சட்டென்று தோன்றிய ஒரு விஷயம், எனக்குள் பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது. பழமொழி என்பது நம் முன்னோர்களால் பல காலத்திற்கு முன்னர் நல்ல விஷயங்களைப் பறைசாற்றுவதற்காக மட்டுமே சொல்லப்பட்ட ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது, தற்போது நடைமுறையிலுள்ள பல பழமொழிகள் சரியான பொருளைத் தருவதாக இல்லையே!!! இன்னும் சொல்லப்போனால் ஒரு சில பழமொழிகள் சுத்த அபத்தமாகவே தெரிகிறதே!!! ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்ற பழமொழியும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

என்ன காரணத்திற்காக இப்படி அபத்தமான பழமொழிகள் நம் முன்னோர்களால் கூறப்பட்டன? அல்லது நம் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழி இவைகள்தானா?

இப்படிப் பல கேள்விகள் எனக்குள் எழ, சரி ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இணையத்தில் பழமொழிகளின் வரலாற்றினைத் தேடத்தொடங்கினேன். எனக்கு முன்னரே இம்மாதிரியான ஆராய்ச்சியினை நம் தமிழ் ஆர்வலர்கள் பலர் நடத்தியிருப்பார்கள் என்றும், அதனைப் பற்றிய பதிவு நிச்சயம் இந்தப் பரந்து விரிந்த இணையத்தில் எங்காவது இருக்கக்கூடும் என்றும் என் உள்மனது மிக ஆழமாக நம்பியது. அதனை உறுதி செய்யும் வகையில் ஒரு சில பதிவுகளைப் பார்த்தவுடன் மிகவும்  அதிர்ச்சியாகவே இருந்தது. ஆம், எப்படி நம் முன்னோர்களால் அழகாக சொல்லப்பட்ட பழமொழிகள், பின்னர் எவ்வாறு உருமாற்றப்பட்டு , எப்படி தவறாக பொருள் உணரப்படுகின்றது என்பதைப் பார்த்தபோது, மிக அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது.

இப்போது நாம் பயன்படுத்திவரும் பல பழமொழிகளின் பொருள், உண்மையிலேயே அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. முன்னோர்களால் ஓர் அர்த்தத்தில் சொல்லப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி, இன்று முற்றிலும் வேறொரு விதமாக பொருள்  உணரப்படும் அவல நிலையில்தான் தமிழ்ப் பழமொழிகளில் பல, இன்று உள்ளன. இவைகள் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழிகளே அல்ல. மாற்றாக, தவறாய் மாறிப்போன அல்லது மாற்றப்பட்ட புதுமொழிகள்.

இப்படி வழி தவறிப்போய் உருமாறியிருக்கும் பழமொழிகள் இரு வகைப்படும். ஒன்று, பழமொழிகளே மாற்றப்பட்டு வேறொரு விதமாகக் கூறப்படுவது. மற்றொன்று, பழமொழிகளின் பொருள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது.

சரி, இப்போது கூறப்படுவது அல்லது பொருள் உணரப்படுவது தவறான பழமொழிகள் என்றால், சரியான பழமொழிகள்தான் என்ன? அதன் சரியான பொருள்தான் என்ன? இந்தக் கேள்விகள்தான் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கான விடையை இனி காண்போம்!!!

பழமொழிகளே மாற்றப்பட்டு வேறொரு விதமாகக் கூறப்படுவது:

பழமொழி - 1:

புதுமொழி -  ஆயிரம் பொய் சொல்லி  ஒரு கல்யாணம் பண்ணு.

புதுமொழியின் பொருள் - ஒரு கல்யாணம் பண்ணுவதற்கு, ஆயிரம் பொய் சொன்னாலும் தவறில்லை.

பழமொழி - ஆயிரம் முறை போய் சொல்லி  ஒரு கல்யாணம் பண்ணு.

பழமொழியின் பொருள் 1 - நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் சில நேரங்களில் நாம் பகைமை கொண்டு, நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்குக்கூட அவர்களை அழைக்காமளிருப்போம். ஆனால் கண்டிப்பாக திருமணத்திற்கு மட்டுமாவது, அம்மாதிரி பகைமை கொண்டிருப்பவர்களையும் கூட விட்டுவிடாமல், ஆயிரம் முறை போய் சொல்லியாவது, அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும்.

பழமொழியின் பொருள் 2 - பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.


பழமொழி - 2:

புதுமொழி -  ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

புதுமொழியின் பொருள் - ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன். ஆக, ஒருவன் முழு வைத்தியன் ஆகவேண்டுமென்றால், இரண்டாயிரம் பேரையாவது தன் மருத்துவத்தால் கொல்ல வேண்டும்.

பழமொழி - ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்.

பழமொழியின் பொருள் - பழங்காலத்தில் நம் தமிழ் மக்களின் மருத்துவ முறை சித்தவைத்தியம். சித்தவைத்தியத்திற்கு முக்கியமான பொருள் மூலிகை வேர்கள்தான். அதன் காரணமாக வந்ததுதான் மேற்கூறிய பழமொழி. அதாவது, எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேர்களைக் கொண்டுள்ளானோ, அல்லது ஆயிரம் வேர்களைப் பார்த்து அறிந்துள்ளானோ, அவன் தான் அரை வைத்தியனாவான்.


இன்னும் பல பழமொழிகள், அடுத்த பதிவில் ... தொடரும் ...

மறக்காம மறுபடியும் கண்டிப்பா வாங்க!!!