Wednesday, March 6, 2013

நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?



Ek Gaun Mein Ek Kissan Raghu ThaTha



நான் ஏன் இந்தி கற்க வேண்டும்? எதற்காக இந்தி தெரிந்துகொள்ள வேண்டும்? என் தாய்மொழி தமிழ்!!! அவ்வாறு இருக்கும்பொழுது, நான் ஏன் மற்றொரு மொழியினைக் கற்க வேண்டும். என் தாய்மொழியினால் எனக்குக் கிடைத்துவிட முடியாத ஒன்று, மற்றொரு மொழியினால் மட்டும் எப்படி எனக்கு கிடைத்துவிட முடியும். முக்கால்வாசி தமிழர்களின் மனதில், இந்தி மொழியினைப் பற்றிய எண்ணம் இவ்வாறாகத்தான் இருக்கும், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், சில காலம் முன்புவரை.

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்பொழுது, பள்ளி நேர முடிவிற்குப்பின், தினமும் ஒரு மணி நேரம் என்று, இரண்டு மாதத்திற்கு, இந்தி கற்றுக் கொடுப்பதற்காக ஒரு சிறப்பு வகுப்பு, எங்களது பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், நானும் ஏதோ ஒரு ஆர்வத்தில் அந்த வகுப்பில் சேர்ந்துவிட்டேன். ஆனால் சேர்வதில் இருந்த ஆர்வம், வகுப்பு தொடங்கிய ஓரிரு நாட்களுக்குப்பின், அம்மொழியினைச் சரிவர கற்பதில் என்னிடத்தில் இல்லாமல் போய்விட்டது. என் தாய்மொழி அல்லாத மற்றொரு மொழியினை என்னால் அவ்வளவு எளிதாக ஏற்க முடியவில்லை, புரிந்துகொள்ளவும் முடியவில்லை. எனக்கு அந்த வகுப்பில் கவனம் செலுத்தவும் பிடிக்கவில்லை. அந்த வகுப்பில் நானிருந்த ஒவ்வொரு நிமிடமும், எனக்குள் ஏதோ ஒன்று, ஒரு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துவதாகவே உணர்ந்தேன். ஏதோ முட்களின் மீது பயணம் செய்வதுபோல் ஒரு உணர்வு. ஒரு சில நாட்களுக்குப்பின், வகுப்பில் சுத்தமாக கவனம் செலுத்துவதையே விட்டுவிட்டு, என்னைப்போலவே இருக்கும் ஒரு சில சக நண்பர்களுடன், வகுப்பு நடந்துகொண்டிருக்கும்பொழுதே, அரட்டை அடிக்கத் தொடங்கினேன். இவ்வாறாக ஒரு சில நாட்கள் கழிந்தது.

என்னைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல, எப்போதும் வகுப்பு முடிந்தவுடன் வரும் என் தந்தை, அன்று ஒரு நாள் சற்று சீக்கிரமாகவே வந்துவிட்டார். வந்தவர், வகுப்பு நடக்கும் இடத்திற்கே நேராக வந்து, நான் மற்ற மாணவர்களுடன் விளையாடிக்கொண்டும், அரட்டையடித்துக்கொண்டும், வகுப்பில் கவனம் செலுத்தாமலிருப்பதைக் கண்டு கடுப்பாகிப் போனவராய், வீட்டிற்கு என்னைக் கூட்டிச் சென்று வெளுத்துவாங்கினார். பின் ஒரு சில முறை என்னிடம் இதைப்பற்றி நல்ல முறையில் சொல்லிப் பார்த்தும் பலனின்றி, சில நாட்களுக்குப்பின், எப்படியோ போய்த்தொலையட்டும் என்றும் அவரும் விட்டுவிட்டார். யாரும் நம்மைக் கண்டுகொள்வதில்லையே என்று நானும் இந்தி வகுப்பிற்குச் செல்வதையே விட்டுவிட்டேன்.

அதன் பிறகு, அன்று நாம் இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே, நல்ல வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டோமே, என்ற எண்ணமெல்லாம்  எனக்குள் தோன்றியதேயில்லை, ஒரு சில வருங்களுக்கு முன்புவரை. காரணம், எனது பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, எனது எட்டாண்டு கால வேலை, என்று எல்லாமே எனக்குச் சென்னையில்தான். நான் சென்னையிலிருந்தவரை, எனக்கு இந்தி தெரியவில்லையே என்ற என்னமோ, வருத்தமோ  ஒரு நாள் கூட எனக்குள் எழுந்ததில்லை. இந்தி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று, உலகம் எவ்வாறு இருக்கும் என்று பார்த்துவர வாய்ப்பே இல்லாமல் இருந்துவிட்டது.

இவ்வாறாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நேரத்தில், சுமார் ஒரு வருடத்திற்கு முன், பணி நிமித்தமாக, பெங்களூருக்கு மாற்றலாகி வர நேர்ந்தது. புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே, நான் அன்று செய்தது எவ்வளவு பெரிய தவறென்றும், எவ்வளவு ஓர் அரிய வாய்ப்பினை இழந்துவிட்டேன் என்றும் எனக்கு நன்றாகப் புரிந்தது. நான் பணிபுரியும் நிறுவனத்தில், என்னைத்தவிர, மூன்று நான்கு பேர் மட்டுமே தமிழர்கள், தமிழில் பேசக்கூடியவர்கள். மற்ற அனைவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் பழகும்பொழுது, நான் கண்டு வியந்த விஷயம் ஒன்று என்னவெனில், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும், அந்தந்த மாநிலத்தின் மொழியைத் தவிர, நம் நாட்டின் தேசிய மொழியான இந்தியும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆகையால் ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவருடன் பேசும்பொழுது, இருவருக்கும் நன்றாகத் தெரிந்துள்ள, பொதுமொழியாகிய இந்தியையே பயன்படுத்துகின்றனர்.

எனது நண்பர்கள், என்னுடன் பணியாற்றுபவர்கள் என அனைவரும் அவர்களுக்குள் இந்தியில் பேசிக்கொள்ளும்போழுது, என்னால் அவர்கள் பேசுவதை ஒரு ஓரமாக நின்று வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்ததே தவிர, அவர்களுடன் அவர்கள் பேசும் மொழியில் என்னால் பேச முடியவில்லை. இதனால் பல நேரங்களில் நான் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்.

பெங்களூரில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஒரு கூட்டமாக வெவ்வேறு மாநிலத்து இந்தியர்கள் எங்கிருந்தாலும் இதே நிலைதான். காரணம், இந்தியாவில் மட்டும்தான் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் இருபத்தி இரண்டு மொழிகள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மற்ற எந்த நாடுகளை எடுத்துக்கொண்டாலும், இவ்வளவு மொழிகள் பேசப்படுவதுகிடையாது. அப்படியே சில நாடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும், அந்த நாட்டின் தேசிய மொழி கட்டாயம் எல்லோராலும் அறியப்பட்டிருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், இந்தோனேசியாவை எடுத்துக்கொள்வோம். அந்நாட்டின் தேசிய மொழி, பஹாசா என்றறியப்படும். அந்நாட்டில், பாலி என்றொரு சுற்றுலாவிற்குப் பிரபலமான மாகாணம் உள்ளது. அம்மாகானத்து மக்களிடையே பாலினீஸ் என்ற மொழி பயன்பாட்டிலுள்ளது. தேசிய மொழி அல்லாமல், வேறொரு மொழி தன் மாகாணத்து மொழியாக இருந்தாலும் கூட, பாலியில் உள்ள அனைத்து மக்களும், பாலினீஸ் மொழியுடன் சேர்த்து பஹாசா மொழியும் அறிவர். பஹாசா மொழி, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாயம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்தியாவில், இதற்கு தமிழ்நாடும் தமிழனும் மட்டும்தான் விதிவிலக்கா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஏனெனில், இந்தி பெரும்பான்மையாக பயன்படுத்தப்படாத  ஒவ்வொரு மாநிலத்திலும், இந்தி பேசத்தெரியாத மக்கள் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலத்தவர்களைவிட, இந்தி பேசத்தெரியாத தமிழர்கள் அதிகம் என்று கண்டிப்பாக சொல்லாலாம். காரணம், தமிழர்களிடையே, தமிழர்களால், இந்தி புறக்கணிக்கப்படுகிறது.

அதற்காக இந்தி பேசத்தெரிந்தால் மட்டும்தான் இந்த உலகத்தில் காலம் தள்ள முடியும் என்றெல்லாம் இல்லை. ஆங்கிலம் எப்படி இருவேறு தேசிய மொழிகளைக் கொண்ட நாட்டு மக்கள் உரையாடுவதற்குப் பாலமாக அமைகிறதோ, அதேபோல்தான், இந்தியும் இருவேறு மாநில மொழிகளைக் கொண்ட மாநிலத்தவர்கள் சரளமாகப் பேசுவதற்குப் பாலமாக அமைகிறது.

இந்தி மொழியை உயர்த்திப் பேசுவதால், தமிழ் மொழியைத் தாழ்த்துவதாக அர்த்தம் கிடையாது. தமிழ் சிறப்பான மொழி, பழம்பெரும் மொழி, அழகான மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தமிழர்களாகிய நாம், தமிழ் மொழியுடன் சேர்த்து இந்தியையும் கற்பது சிறந்ததாகும். நம் தலைமுறையில் நாம் இந்தி கற்கவில்லை என்றாலும்கூட, நம் குழந்தைகளாவது நிச்சயம் தமிழும், கூடவே சேர்ந்து இந்தியும் அவர்கள் அறியும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இன்றில்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் நிச்சயமாக அது அவர்களுக்குக் கை கொடுக்கும்.



அன்புடன்,
வி.ல.நாராயணசுவாமி

Thursday, February 28, 2013

பாதை மாற்றப்பட்ட பழமொழிகள் - பகுதி 1



அன்பு நண்பர்களே!!! இந்த வலைப்பக்கத்தின் பதிவினை படிக்க வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு என்றால் அது சரியாகாது!!!
சில வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு தொடக்கம் என்றால் அது மிகையாகாது!!!

சமீபத்தில், இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்பொழுது, அன்றாடம் நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல பழமொழிகளில், ஒரு சிலவைகளைப் படிக்க நேர்ந்தது.

அப்படிப் படிக்கும்பொழுது, மனதில் சட்டென்று தோன்றிய ஒரு விஷயம், எனக்குள் பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது. பழமொழி என்பது நம் முன்னோர்களால் பல காலத்திற்கு முன்னர் நல்ல விஷயங்களைப் பறைசாற்றுவதற்காக மட்டுமே சொல்லப்பட்ட ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது, தற்போது நடைமுறையிலுள்ள பல பழமொழிகள் சரியான பொருளைத் தருவதாக இல்லையே!!! இன்னும் சொல்லப்போனால் ஒரு சில பழமொழிகள் சுத்த அபத்தமாகவே தெரிகிறதே!!! ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்ற பழமொழியும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

என்ன காரணத்திற்காக இப்படி அபத்தமான பழமொழிகள் நம் முன்னோர்களால் கூறப்பட்டன? அல்லது நம் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழி இவைகள்தானா?

இப்படிப் பல கேள்விகள் எனக்குள் எழ, சரி ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இணையத்தில் பழமொழிகளின் வரலாற்றினைத் தேடத்தொடங்கினேன். எனக்கு முன்னரே இம்மாதிரியான ஆராய்ச்சியினை நம் தமிழ் ஆர்வலர்கள் பலர் நடத்தியிருப்பார்கள் என்றும், அதனைப் பற்றிய பதிவு நிச்சயம் இந்தப் பரந்து விரிந்த இணையத்தில் எங்காவது இருக்கக்கூடும் என்றும் என் உள்மனது மிக ஆழமாக நம்பியது. அதனை உறுதி செய்யும் வகையில் ஒரு சில பதிவுகளைப் பார்த்தவுடன் மிகவும்  அதிர்ச்சியாகவே இருந்தது. ஆம், எப்படி நம் முன்னோர்களால் அழகாக சொல்லப்பட்ட பழமொழிகள், பின்னர் எவ்வாறு உருமாற்றப்பட்டு , எப்படி தவறாக பொருள் உணரப்படுகின்றது என்பதைப் பார்த்தபோது, மிக அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது.

இப்போது நாம் பயன்படுத்திவரும் பல பழமொழிகளின் பொருள், உண்மையிலேயே அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. முன்னோர்களால் ஓர் அர்த்தத்தில் சொல்லப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி, இன்று முற்றிலும் வேறொரு விதமாக பொருள்  உணரப்படும் அவல நிலையில்தான் தமிழ்ப் பழமொழிகளில் பல, இன்று உள்ளன. இவைகள் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழிகளே அல்ல. மாற்றாக, தவறாய் மாறிப்போன அல்லது மாற்றப்பட்ட புதுமொழிகள்.

இப்படி வழி தவறிப்போய் உருமாறியிருக்கும் பழமொழிகள் இரு வகைப்படும். ஒன்று, பழமொழிகளே மாற்றப்பட்டு வேறொரு விதமாகக் கூறப்படுவது. மற்றொன்று, பழமொழிகளின் பொருள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது.

சரி, இப்போது கூறப்படுவது அல்லது பொருள் உணரப்படுவது தவறான பழமொழிகள் என்றால், சரியான பழமொழிகள்தான் என்ன? அதன் சரியான பொருள்தான் என்ன? இந்தக் கேள்விகள்தான் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கான விடையை இனி காண்போம்!!!

பழமொழிகளே மாற்றப்பட்டு வேறொரு விதமாகக் கூறப்படுவது:

பழமொழி - 1:

புதுமொழி -  ஆயிரம் பொய் சொல்லி  ஒரு கல்யாணம் பண்ணு.

புதுமொழியின் பொருள் - ஒரு கல்யாணம் பண்ணுவதற்கு, ஆயிரம் பொய் சொன்னாலும் தவறில்லை.

பழமொழி - ஆயிரம் முறை போய் சொல்லி  ஒரு கல்யாணம் பண்ணு.

பழமொழியின் பொருள் 1 - நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் சில நேரங்களில் நாம் பகைமை கொண்டு, நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்குக்கூட அவர்களை அழைக்காமளிருப்போம். ஆனால் கண்டிப்பாக திருமணத்திற்கு மட்டுமாவது, அம்மாதிரி பகைமை கொண்டிருப்பவர்களையும் கூட விட்டுவிடாமல், ஆயிரம் முறை போய் சொல்லியாவது, அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும்.

பழமொழியின் பொருள் 2 - பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.


பழமொழி - 2:

புதுமொழி -  ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

புதுமொழியின் பொருள் - ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன். ஆக, ஒருவன் முழு வைத்தியன் ஆகவேண்டுமென்றால், இரண்டாயிரம் பேரையாவது தன் மருத்துவத்தால் கொல்ல வேண்டும்.

பழமொழி - ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்.

பழமொழியின் பொருள் - பழங்காலத்தில் நம் தமிழ் மக்களின் மருத்துவ முறை சித்தவைத்தியம். சித்தவைத்தியத்திற்கு முக்கியமான பொருள் மூலிகை வேர்கள்தான். அதன் காரணமாக வந்ததுதான் மேற்கூறிய பழமொழி. அதாவது, எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேர்களைக் கொண்டுள்ளானோ, அல்லது ஆயிரம் வேர்களைப் பார்த்து அறிந்துள்ளானோ, அவன் தான் அரை வைத்தியனாவான்.


இன்னும் பல பழமொழிகள், அடுத்த பதிவில் ... தொடரும் ...

மறக்காம மறுபடியும் கண்டிப்பா வாங்க!!!